A.P.J. Kalam in எதிர்கால கனவு கிராமங்களின் மறுசீரமைப்பு(Reconstruction of future dream villages)

    நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப சாதனைகள் நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளுக்கும் உதவியிருக்கின்றன. நவீன உரங்கள், வேளாண் வேதியியல் பொருள்கள் (அதிக விளைச்சலைத் தருபவை), ஆரோக்கியப் பணிகள், மின்சாரம், தொலைக்காட்சி, பேருந்துச் சேவை. விவசாயக் கருவிகள், இயந்திரங்கள் என அவற்றைப் பட்டியலிட முடியும். 

நகரப் பகுதிகள் தொழில்களுக்கும் வியாபார நடவடிக்கைகளுக்கும் கேந்திரமாய் விளங்குவதுடன் அரசியல் அதிகார மையமாயும் இருப்பதால் சிறந்த வாழ்க்கை வசதிகளில் அவை முதன்மை பெற்றன.

பொருளாதார நடவடிக்கைகள், வேலை வாய்ப்புகள் நகரத்தில் அதிகம் என்பதால் மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயரத் தொடங்கினார். பெரும்பாலான நகரங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் குடிசைப் பகுதிகளாயும், வசதியற்ற நிலைமைகளோடும் வாழத் தகுதியற்றதாகி யிருக்கின்றன. அங்குள்ள மக்கள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதால் வேலைக்குப் போய் வருவதிலேயே களைத்துச் சோர்ந்து விடுகிறார்கள்.

எனவே, சாலை வளையங்கள் மூலம் கிராமத் தொகுப்புகளை இணைத்து, ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். இது பல வகையிலும் பலனளிப்பதாயிருக்கும்.

விவசாயம் சார்ந்த தொழிற்கூடங்களை தொழில்நுட்பக் கழகங்களை ஏன் சில அரசு அலுவலகங்களையும் கூட, கிராமப்புறங்களில் அமைக்கலாம். அங்கே அமையும் தொழிற்கூடங்களுக்கு சலுகைகளை வழங்கலாம். 

அந்தச் செயல்முறையைத் தொடங்கி விட்டால் எஞ்சியவற்றைப் பொருளாதார நடவடிக்கைகள் பார்த்துக் கொள்ளும் இந்தியா முழுதும் இப்படிப் பல தொகுப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை உள்ளூர் மக்களும், பஞ்சாயத்துகளும், தொழில் துறையில் உள்ளவர்களும், பிரத்யேக அறிவு பெற்றவர்களும் கொண்ட ஓர் அமைப்பு நிர்வகிக்கலாம்.


சமுதாய, பொருளாதார அபிவிருத்தியைச் செய்ய வேண்டுமென்றால் கிராம நகரப் பகுதிகளிடையே ஒரு பொதுப் பங்கீடு அவசியம். டாக்டர் கலாம் அவர்கள் ஒரு மாற்று கிராம அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அது 'PURA' Providing Urban amenities in Rural Areas) என்பதாகும். அதன்படி நகரங்களில் உள்ள வசதிகள் கிராமப் பகுதிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர் தம் எழுத்துகளிலும், குடியரசுத் தலைவர் உரையிலும் கிராமப் புனரமைப்புச் சவால்களில் பங்கெடுக்கும்படி தொழிலதிபர்களையும், மதத் தலைவர்களையும், மக்களை நேசிக்கும் கொடையாளிகளையும் வற்புறுத்தியிருக்கிறார்.

 "PURA திட்டத்தின்படி, குடியிருப்புகள் ஒரு பக்கம் வயல்களிலிருந்து நடக்கக்கூடிய தூரத்திலும் மறுபக்கம் நவீன போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாயும் இருக்க வேலையிடங்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவில் இருக்க வேண்டும். தெருக்கள் அகன்றதாயும், பாதைகள் அமைதியாகவும் அழகாயும் இருக்க வேண்டும்.


'PURA' திட்டத்தைச் செயல்படுத்துவதில் கிராமவாசிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்கிறார் கலாம். 'PURA' பற்றிய விழிப்புணர்வை கிராமத் தலைவர்கள் தங்களுடைய மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுடைய பங்களிப்பை விருப்புடன் வழங்க முன் வருவார்கள்.

அந்தப் பங்களிப்பு கீழ்க்காணும் வடிவங்களில் இருக்கலாம்:

  • கிராமத்தில் படிப்பறிவின்மையை ஒழிக்கும் நடவடிக்கையை மேம்படுத்துவது.

  • கிராம நிர்வாகத்தில் கம்ப்யூட்டர் கல்வியின் பயன்பாட்டை விளக்குவது.


  • கிராமக் கூட்டுறவுகளை உருவாக்குவதன் மூலம் மையக் கொள்முதல். சேமிப்பு, பாதுகாப்பு, பக்குவப்படுத்தல், ஆகியவை மட்டுமன்றி பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கச் செய்வது.

  • ஊட்டச்சத்து, சுகாதார வசதி, பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பாடுபடுவது.

 

  • வரதட்சணை,பால்யவிவாகம், பெண் சிசுவைக்கருவிலேயே கொன்றுவிடுவது. 

  • குழந்தைத் தொழிலாளர், குடும்ப வன்முறை, சமூக ரீதியாய்ப் பின்தங்கியவர்களைக் கொடுமைப்படுத்துவது போன்ற சமூகத் தீமைகளுக்கெதிராய்ப் போராடுவது. 

  • பெண்களின் பொருளாதார சுதந்தரத்தை ஊக்குவிப்பது.அதற்காக சுய உதவிக் குழுக்களை அமைப்பது. சூரிய வெப்பத்தைச் சக்தியாய் மாற்றிப் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பின் மூலம் சிறந்த முறையில் நீர் நிர்வாகம் செய்தல்.