கலாமின் வாழ்க்கைத் தத்துவம்

கலாம் சாதாரணர்கள் நடுவே ஓர் அசாதாரண மனிதராய் இருப்பதால் தான் அவருடைய வாழ்வின் மிகச்சிறிய நிகழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கவையாகி விட்டன. நாடெங்கும் கதை கதையாய் பேசப்படுகின்றன.

கலாம் தம் வாழ்விற்கான உந்து சக்தியை தம் பெற்றோரிடமிருந்தே அடையப் பெற்றார். அவர்கள் விவேகமும் மதப்பற்றும் கொண்டவர்கள். இயற்கையை, மனிதர்களை, இறைவனை நேசித்ததற்கான அன்பை அவர்கள்தாம் அவருடைய நெஞ்சில் விதைத்தனர்.

தம் தந்தையைப் போலவே கலாமும் மதநம்பிக்கை, இரக்கம், தயாளகுணம் கொண்டவர். ஆனால் அவர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத பழைமை விரும்பியல்லர்.  மதச்சார்பின்மையின் செறிவடக்கம் (eiptome) அவர்.


கலாம் இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அதே சமயம் எதையும் தர்க்கரீதியாய்ப் பரிசீலித்த பின்பே ஏற்றுக் கொள்வார். எந்தவொரு வேலையிலும், செயல் திட்டத்திலும் ஈடுபடுவதற்கு முன் இறைவனை நினைவில் கொள்வார். தினமும் இரண்டு முறை தொழுகிறவர் அவர். வெற்றியோ தோல்வியோ எத்தருணத்திலும் இறைவனை                    
தம் சிந்தையில் வைத்துப் போற்றுவார்.

கலாம் மதம் பற்றித் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார். எல்லா மதங்களும் மனிதனின் ஆன்ம மேம்பாட்டையே குறிக்கோளாய்க் கொண்டவை. வன்முறையை எந்த மதமும் ஆதரிக்கவில்லை என்பது அவருடைய கருத்து. மனிதன் தீய சக்திகளைத் தோற்கடித்து அமைதியாய் வாழ்வதற்கு மதங்கள் அவனை ஊக்குவிக்கும் என்பார் அவர். ஆன்மிகமும் கல்வியும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பவை. அவற்றைத் தனித்தனியே பிரிக்க முடியாதென அவர் நம்பினார். 


பொருட் செல்வம் தேடுவதில் ஆன்மிகம் தடையாகாது என்பது அவருடைய நம்பிக்கை. தம்மளவில் எளிய வாழ்க்கை நடத்தி வந்தாலும், செல்வம் தேடுவதை அவர் ஆதரிக்கவே செய்தார்.

கடவுள் மனிதனை பூமிக்கு அனுப்பியது தன்னுடைய திறமையைப் பயன்படுத்தவும், ஆரோக்கிய வாழ்வு வாழவும்தான் என அவர் நம்பினார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்கிறான் என்பது கூட அவனுடைய விருப்பத்தை ரசனையைப் பொருத்தது என்பார் அவர்.

                                                               _A.P.J அப்துல் கலாம்