சமயோசித புத்தி, பதறாத காரியம் சிதறாது, உதவி செய்யுங்கள் மற்றும் அறிவு. சுவாமி விவேகானந்தரின் சிறுகதைகள்
சமயோசித புத்தி (Sophisticated intellect)
சமயோசித புத்தி இருப்பவன் எந்தச் சூழ்நிலையிலும் கலங்கமாட்டான். ஆபத்துக்களைத் தைரியமாக எதிர்கொண்டு, அவற்றையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான்.
நரேனும் அவனது பள்ளித் தோழர்களும் ஒருநாள் மிருகக்காட்சி சாலைக்கு சென்றார்கள். திரும்பிவரும்போது கங்கை நதியில் படகில் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு நண்பன் உடல்நலமின்றி படகிலேயே வாந்தி எடுத்துவிட்டான். உடனே படகோட்டிகள் நரேனையும் நண்பர்களையும் படகைவிட்டு இறங்கச் சொன்னார்கள். படகையும் சுத்தம் செய்யச் சொல்லி மிரட்டினார்கள்.
பயந்த நண்பர்கள் இரு மடங்கு கட்டணம் தருவதாகப் படகோட்டிகளிடம் மன்றாடினார்கள். சரி என்று சம்மதித்த படகோட்டிகள் அவர்களைக் கரைக்குக் கொண்டு சென்றார்கள். கரையில் இறங்குவதற்குச் சற்று தூரத்தில் மீண்டும் அதிகப் பணம் கேட்டு தகராறு செய்தார்கள்; கொடுக்க இயலாதென்றால் படகிலிருந்து இறங்கக் கூடாது என்று மிரட்டினார்கள். அப்போது நரேன் யாருக்கும் தெரியாமல் படகிலிருந்து குதித்தான். கரையை அடைந்தான். அருகே உலாவிக் கொண்டிருந்த ஆங்கிலேய சிப்பாய்களிடம் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நிலைமையைப் புரியவைத்தான். அதோடு மட்டுமின்றி, அவர்களுடன் தானும் கைகோர்த்துக்கொண்டு படகு நின்ற இடத்திற்குச் சிப்பாய்களை அழைத்து வந்தான்,
நரேனின் துடிப்பும் பேச்சும் அந்த வீரர்களைக் கவர்ந்தன. அதனால் அவர்கள் படகோட்டிகளிடம் சென்று சிறுவர்களை விடுவிக்கும்படி கட்டளையிட்டனர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் கட்டளையை மறுக்க யாரால் முடியும்? படகோட்டிகள் மறுபேச்சின்றி சிறுவர்களை விடுவித்தார்கள்.
தக்க தருணம் வரும்வரை காத்திருந்து தன் நண்பர்களைச் சமயோசிதமாக காத்த நரேன் நாளடைவில் 'இந்திய திருநாட்டைக் காக்க வந்த வெற்றித்திலகம்' என்பதை நாடே அறிந்தது, தாமும் அறிவோம்.
பதறாத காரியம் சிதறாது (A thing that is not disturbed does not disperse)
அன்பு நிலவும் இடத்தில் அமைதி நிலைத்து நிற்கும், அகிம்சை ஊற்றெடுக்கும்.
அன்புக் குழந்தைகளே!
நம் நரேன் அன்பின் வடிவமாகத் திகழ்ந்தான். பிறருக்கு உதவுவது என்பது அவனது ரத்தத்தில் ஊறிய பண்பாக இருந்தது.தனக்குத் துன்பம் நேர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்தவர் நலத்தில் ஈடுபாடு காட்டினான் அவன்.
நரேனின் வீட்டிற்கு அருகில் ஓர் உடற்பயிற்சிக் கூடம் இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவன் போவதுண்டு. ஒருநாள் பெரிய மரக்கட்டை ஒன்றை எடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அது அதிக எடை கொண்டதாக இருந்ததால் அவர்களால் தூக்க முடியவில்லை.
அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த சிலர் இதை வேடிக்கை பார்த்தார்கள். அவர்களில் வாட்டசாட்டமான ஆங்கிலேய மாலுமி ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். சிறுவர்களுடன் சேர்ந்து மரக் கட்டையைத் தூக்கத் தொடங்கினார். ஆனால் மரம் நழுவி மாலுமியின் மீதே விழுந்துவிட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவர் உணர்விழந்து தரையில் வீழ்ந்தார்.
மாலுமி இறந்துவிட்டார். இனியும் அங்கிருந்தால் ஆபத்து என்று பலர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். நண்பர்களில்கூட ஓரிருவர்தான் நின்று கொண்டிருந்தனர். நரேன் பதறவில்லை. தன் வேட்டியிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து மாலுமியின் காயத்தில் கட்டினான். பிறகு, முகத்தில் தண்ணீரைத் தெளித்து விசிறத் தொடங்கினான்.
சிறிதுநேரத்திற்குப் பிறகு மாலுமி கண்ணைத் திறந்தார். நரேனிற்கும் நண்பர்களுக்கும் கவலை பறந்தது. அவரை அருகிலிருந்த பள்ளிக்கூட அறையில் தங்கவைத்தனர். மருத்துவரை அழைத்து வந்தனர். அவருக்கு வேண்டிய சேவை செய்தனர்.
அந்த நாளில் இந்தியர்களின் அஜாக்கிரதையால் மயக்கம் வரும் அளவிற்கு இங்கிலேயர் ஒருவர் அடிபட்டார் என்றால் அது அரசாங்கக் குற்றம். எனவே வேடிக்கை பார்த்தவர்கள் ஓடிவிட்ட போதும்கூட, பதறாமல் நற்காரியம் செய்து, பிறருக்கு உதவிய பண்பினை நாமும் பாடமாக ஏற்றுக்கொள்வோம். பதறாத காரியம் சிதறாது அல்லவா?
உதவி செய்யுங்கள் (Please help)
பிறர் துன்பத்தில் உதவுவது சிறுவயதிலேயே நரேனின் இயல்பாக இருந்தது. தேவை ஏற்பட்டால், தன் உயிரையும் மதியாமல் அவன் பிறர் நலம் நாடினான் அவனது சிறுவயது நிகழ்ச்சி ஒன்றைக்காண்போமா!.
நரேனுக்கு ஆறு வயது இருக்கும். ஒருமுறை அவன் தன் உறவுச் சிறுவன் ஒருவனுடன் ஒரு திருவிழாவிற்குச் சென்றிருந்தான். அங்கிருந்து சிவபெருமான் பொம்மைகளை வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் நண்பன் பிரிந்ததுபோல் தோன்றவே நரேன் திரும்பிப் பார்த்தான். திரும்பிய நரேனின் கண்களில் பட்டது திடீரென்று பாய்ந்து வந்த குதிரை வண்டி ஒன்று. குதிரையின் கால்களில் சிக்க இருந்தான் நண்பன். நரேன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. பொம்மைகளை அப்படியே இடது அக்குளில் திணித்துக்கொண்டு பாய்ந்தோடி, வலது கையால் அவனை இழுத்தபடி புரண்டு விழுந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் திகைப்புடன் நரேனின் செயலைப் பார்த்தனர். சிலர் அவனை வாழ்த்தினர், சிலர் அவனையும் தூக்கி நிறுத்தி முதுகில் தட்டிக் கொடுத்து ஆசீர்வதித்தனர்.
இதனைக் கேள்விப்பட்டபோது. புவனேசுவரி மகனின் வீரத்தை மெச்சி ஆனந்தக் கண்ணீர் வடித்தபடியே, ஆம், நரேன், எப்போதும் ஓர் ஆண் மகனாக இரு என்று கூறினாள்.
அறிவு (Knowledge)
ஒரு காலத்தில் பாரதத் திருநாடு பாருக்கெல்லாம் திலகமாகத் திகழ்ந்தது. அறிவைத் தேடுபவர்களும் செல்வத்தை நாடுபவர்களும் தஞ்சமடைகின்ற நாடாகத் திகழ்ந்தது. ஆனால் சுயநலமும் பொறாமையும் பெருகியதில் நமது திருநாடு, தன் சுய ஆற்றலை இழந்து மாற்றான் வசப்பட்டது. ஆங்கிலேயன் நம்மை அடக்கிவைத்திருந்த வேளையில் வங்கத்தில் ஒரு சிங்கமாக வந்து பிறந்தார் சுவாமி விவேகானந்தர். ஆங்கிலேயர் வசமிருந்த இந்திய மக்களில், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது; அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவைகூட போதிய அளவு இல்லாமல் வாடினார்கள். ஆங்கிலேயனின் காலடியில் கிடக்க நேர்ந்ததில் அவர்கள் தன்னம்பிக்கையையே இழந்துவிட்டிருந்தார்கள். தங்கள் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறந்து அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். இந்த இழிநிலை கண்டு சுவாமிஜி மனம் நொந்தார்.
அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக, அறியாமையால் உழலும் இவர்களை உயர்த்த வேண்டும், அதற்கு அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும், அவர்களின் அறியாமையை அகற்ற வேண்டும் என்பதை உணர்ந்தார் அவர். அதற்கு என்ன வழி? உணவின்றி வாடுபவனிடம் வேதாந்தம் பேசிப் பயனில்லை. அவனுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் தருவதே முதல் வேலை. அதன் பிறகு படிப்படியாகக் கல்வி தந்து அவர்களை மனிதர்களாக்க வேண்டும், மதிக்கத்தக்க மனித சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று விரும்பினார் அவர்.
சிகரத்தைப்போல் செல்வம் படைத்தவன்கூட சில காலம் உழைக்காமல் உண்பானாயின் குன்றெனக் குவிந்த பொருட்செல்வம் குறைந்து போய்விடும். ஆனால் கல்விச் செல்வம் அப்படியல்ல; அது அள்ள அள்ளக் குறையாத செல்வம். அது இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரக் கூடியது. கொடுத்தாலும் குறைபடாது, வெந்தணலால் வேகாது, வேந்தராலும் கொள்ள முடியாதது. அத்தகைய கல்விச் செல்வத்தை நாடெங்கும் வழங்க விரும்பினார் சுவாமி விவேகானந்தர். அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.
Vivekanandar தோற்றுவித்த Ramakrishna Mission இன்று இந்தக் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. India முழுவதிலும் அதன் பல்வேறு கிளைகள் மிகவும் அரியதான இந்தக் கல்விப் பணியைச் செய்து வருகின்றன. Chennai, Mylaporeரில் சிறப்புடன் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்ல School, பள்ளிக் கல்வியுடன் உயரிய வாழ்க்கைத் தேவையான ஒழுக்கக் கல்வியையும் வழங்கி நூற்றாண்டு கண்டு, சுவாமிஜியின் அறிவுத் தீபமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

0 Comments
Post a Comment
Thanks for reading my site